பன்முகத் திறமை கொண்டவர் கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி: கி.நாகலிங்கம், மாவட்ட கழக பிரதிநிதி, திரு.வி.க. நகர் தெற்குப் பகுதி

“நான் அரசு ஊழியனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன். என்னுடைய சிறு வயதிலேயே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பேச்சாற்றலாலும், எழுத்தாற்றலாலும் ஈர்க்கப்பட்ட நான், தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணியாற்றியபோது, 'முரசொலி' நாளிதழ் இல்லாமல் ஒருநாள்கூட பணிக்கு சென்றது கிடையாது. இதனாலேயே என் மீது பலருக்கும் காழ்ப்புணர்ச்சி. இதன்காரணமாக பணிக்காலத்தில் நிறைய இன்னல்களையும் அனுபவித்தேன். என்றாலும், இயக்கத்திற்கான களப்பணிகளை முழு வீச்சில் தொடர்ந்து செய்து வந்தேன்” என்று நம்மிடம் உற்சாகத்தோடு உரையாடத் துவங்கினார் கி.நாகலிங்கம் அவர்கள்.



64 வயதாகும் நாகலிங்கம் அவர்கள் தற்போது சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க.நகர் தெற்குப் பகுதியின் 76வது வட்ட, மாவட்டக் கழகப் பிரதிநிதியாக பொறுப்பு வகிக்கிறார்.  'நமது தளபதி' இதழுக்காக நாகலிங்கம் அவர்களை நாம் நேர்கண்டபோது, மேலும் பல்வேறு விஜயங்களை ருசிகரமாகப் பகிர்ந்தார்.


“என்னுடைய ஆரம்பகால அரசியல் பணிகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் முன்னாள் வட்டச் செயலாளரும், கவுண்சிலரும், கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான அமரர் பி.ஷெயராமன் அவர்கள்தான் என்பதை இங்கே பதிவு செய்வது என் கடமை. துவக்கத்தில் 66வது வட்டக் கழக பொருளாளராகவும், பிறகு அதே 66வது வட்டத்தின் கழகப் பொறுப்பாளராகவும், பின்னர் 99வது வட்டக் கழக செயலாளராகவும் பொறுப்பு வகித்து, பின்னர் மாவட்டக் கழகப் பிரதிநிதியாகப் பதவி வகித்து, அதன் பிறகு மீண்டும் 99 வட்டக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்போது மீண்டும் மாவட்டக் கழகப் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்து வருகிறேன்” என்று அடைமழையின் ஆரம்பம் போல் மளமளவென்று தனது கடந்தகால பொறுப்புகளையும், பதவிகளையும் பற்றி நம்மிடம் உரையாடியவர், மீண்டும் தொடர்ந்தார்.


“1984ம் ஆண்டு நாஞ்சில் மனோகரன் தலைமையில் எனக்கு சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. என் வாழ்க்கைத் துணையாக இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த என் மனைவி திருமதி சத்யா அவர்களைப் பற்றி இங்கே சொல்லியாகவேண்டும். ஏனென்றால், இயக்கப் பணிகளில் எனக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என் மனைவியார். சொல்லப்போனால், என்னைவிடவும் அதிவேகமாகவும், தைரியமாகவும் செயல்படக்கூடியவர் என் மனைவி. தற்போது பகுதி பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்து வரும் என் மனைவி, கட்சி நிகழ்ச்சிகள் ஒன்றைக்கூட தவறவிடமாட்டார். குறிப்பாக, கட்சி நடத்தும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் யாவற்றிலும் முதல் ஆளாக கலந்து கொள்வார். அதுபோல், என் மருமகன் வினோத்குமார் அவர்களும் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, கழக இளைஞர் அணியில் எனது மருமகனின் செயல்பாடுகள் மும்முரமாக இருந்து வருகிறது” என்று உணர்வுப் பெருக்கோடு பேசியவர், சிறு இடைவெளிவிட்டு மீண்டும் அருவிபோல் தனது உரையாடலை கொட்டத் துவங்கினார்.


“எனது மகன் சண்முகப் பிரியன் பி.எஸ்.சி., எம்.சி.ஏ அவர்கள் திருமணம் கழகத் தலைவர் தளபதியார் தலைமையில்தான் நடைபெற்றாக வேண்டும் என்பதற்காக, மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு அவர்களிடம் தேதி கேட்டுள்ளேன். என் லட்சியம் நிச்சயமாக நிறைவேரும் என்கிற நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது” என்றவரிடம் நமது கேள்விகள் தொடுக்கப்பட்டன.


உங்கள் 76வது வட்டம் பற்றி?
“எங்கள் 76வது வட்டத்தில் மொத்தம் 22 பாகங்கள் உள்ளன. இந்த 22 பாகங்களிலும் சுமார் 60 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இவர்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம். எங்கள் வட்டத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் கழகத் தலைவர் தளபதியாரின் தீவிர விசுவாசிகள் என்பதால், எங்கள் வட்டம் எப்போதும் தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. ஆம், கழகத்தின் கோட்டையாக விளங்கிவரும் எங்கள் வட்டத்தில், எல்லாத் தேர்தல்களிலும் தி.மு.க.வே அதிக வாக்குகளைப் பெற்று வருகிறது என்பது வரலாறு. மேலும், எங்கள் வட்டத்தில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு அவர்களின் வழிகாட்டுதலில் மிக நேர்த்தியாகவும், கச்சிதமாகவும், கடினமாகவும், ஒற்றுமையாகவும் உழைத்து வருவதால், எங்கள் வட்டக் கழகம் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்பதை இங்கே பெருமையோடு பகிர்ந்து கொள்கிறேன்.”


இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பற்றி?
“பெரியார், அண்ணா ஆகியோரின் கனவுகளை நிஷமாக்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆசியோடு, கழகத் தலைவர் தளபதியாரின் வழிகாட்டுதலில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் உதயநிதி அவர்கள். கலைத்துறையில் எப்படி மக்களின் கவனம் ஈர்த்தாரோ அதே போன்று அரசியலிலும் ஆரம்ப நிலையிலேயே மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார் உதயநிதி. படித்தவர், பண்பானவர், கடுமையான உழைப்பாளி, சிறந்த பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டுள்ள உதயநிதி அவர்கள் கழக இளைஞர் அணியை இமயம்போல் உயர்த்தி, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு புகழ்பெறுவார் என்பது உறுதி.”


உங்கள் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு பற்றி?
“தலைவர் தளபதியாரின் வழியைப் பின்பற்றி, உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் எங்கள் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு அவர்களிடம் அளப்பரிய ஆளுமைத் திறன் இருக்கிறது. சோர்ந்து கிடக்கும் கட்சிக்காரர்களை தன் நிர்வாகத் திறனால் தட்டியெழுப்பி, அவர்களை உற்சாகமாகப் பணியாற்ற வைப்பதில் தனித்துவமானவர். போலியான பசப்பு வார்த்தைகளுக்கும், பாசாங்குகளுக்கும் எங்கள் மாவட்டச் செயலாளர் ஒருபோதும் மயங்கமாட்டார். கழகத்திற்காக உண்மையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு உயர்த்தி விடும் மனித நேயர். யாருக்கு எந்தப் பதவியைக் கொடுக்க வேண்டும் என்பதை கணிப்பதில் வல்லவர். சென்னை கிழக்கு மாவட்டம் களப்பணிகளில் முதன்மையாக விளங்குகிறதென்றால், கழகத் தலைவர் தளபதியாரின் ஆசியோடு செயல்பட்டு வரும் சேகர்பாபு அவர்களின் தனித்தன்மையான செயல்பாடுகளும், ஆளுமைத் திறனும், நிர்வாக ஆற்றலும்தான் காரணம். இதனால்தான், இன்றைக்கு சேகர்பாபு அவர்களைப் பார்த்து பலரும் பொறாமைப்படுகிறார்கள். என்றாலும், தன்மீது பொறாமைப் படுபவர்களிடத்திலும் அன்பு காட்டி அரவணைத்துச் செல்வதில் தாயாகவும், தந்தையாகவும், நல் ஆசிரியராகவும் இருக்கிறார் எங்கள் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு.”