கழகம் எனும் ஆலமரத்திற்கு தன்னை பிரதான வேராக ஒப்புக் கொடுத்திருக்கிறார் உதயநிதி! :- க.காசிநாதன், சென்னை வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்

சென்னை வடக்கு மாவட்டத்தின் விவசாய அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகிக்கிறார் 44 வயதாகும் க.காசிநாதன் அவர்கள்.  'நமது தளபதி' இதழுக்காக காசிநாதன் அவர்களை நாம் நேர்கண்டபோது, நமக்கான நேரம் ஒதுக்கி நமது வினாக்களை எதிர்கொண்டு பதில் அளித்தார்.



உங்கள் குடும்ப பின்னணி பற்றி?
“எங்கள் குடும்பமும், உறவுகளும் தி.மு.க.தான். என்னுடைய தந்தையார் கன்னியப்பன் அவர்கள் மாத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்தவர். மேலும், கிளை அவைத் தலைவராகவும் பதவி வகித்தார் என் தந்தை. எனக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும்  தலைவர் தளபதியார் ஆகியோரின் பெருமைகளையும், தமிழ் இனத்திற்காக அவர்கள் மேற்கொண்ட கடுமையான உழைப்பையும் தெளிவாக எடுத்துரைத்து, கழகத்தின் மீதான ஈர்ப்பும், பற்றும் உருவாக காரணமாக இருந்தவர் என் தந்தையார்தான். ஆகவே, என் தந்தையைத் தொடர்ந்து நானும் கழகத்தில் என்னை முறைப்படி இணைத்துக் கொண்டு, களப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன்.”


கழகத்தில் நீங்கள் ஏற்கனவே வகித்த பதவிகள் பற்றி?
“முதன் முதலில் மாத்தூர் ஊராட்சி இளைஞர் அணி செயலாளராக செயல்பட்டேன். அதன் பிறகு 19வது வட்டக் கழக துணைச் செயலாளராக பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் ஆசியுடன், தலைமை நிர்வாகிகள் பரிந்துரையுடன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டு, கட்சிப் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறேன்.”


கழக வளர்ச்சிப் பணிகளில் விவசாய அணி சார்பாக உங்கள் செயல்பாடுகள் பற்றிச் சொல்லுங்களேன்?
“எங்கள் மாவட்ட விவசாய அணிக்கென்று மாத்தூரில் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை எங்கள் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் அவர்கள்தான் திறந்து வைத்தார். இங்கே விவசாய அணி சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிறைய முன்னெடுப்பு திட்டங்கள் நடைபெறும்.


மேலும், எங்கள் விவசாய அணி சார்பாக இரத்த தான முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகமெங்கும் பரவி வரும் விஷக் காய்ச்சலிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு, நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக இரண்டு வேளாண்மை முகாம்கள் நடத்தப்பட்டது. 


மாத்தூரில் உள்ள புற்றுநோய்க் காப்பகத்தில் ஆண்டு தோறும் கலைஞர் மற்றும் தலைவர் தளபதியாரின் பிறந்த நாளின்போது, மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் அவர்களின் தலைமையில், அந்தக் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான உணவு, உடைமைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் அனைத்துவித தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோன்றே, ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்து வருகிறோம். மேலும், 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ள மழை பாதிப்பின்போது, எங்கள் பகுதிகளில் வசித்த மக்களுக்கு தேவையான உதவிகளை தலைவர் தளபதியாரின் ஆணைக்கிணங்க, மாவட்டச் செயலாளரின் வழிகாட்டுதல்படி செய்தோம். இப்படியாக எங்கள் மாவட்ட விவசாய அணியின் பணிகள் யாவும், தலைமை நிர்வாகிகளின் வழிகாட்டுதல்படியும், தொண்டர்களின் ஒத்துழைப்போடும் செவ்வனே நடைபெற்று வருகிறது.”


கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்ட அனுபவங்கள் பற்றி?
“தி.மு.க.காரன் என்றாலே, மக்கள் நலப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என்றால் கேட்க வேண்டுமா? ஆகவே, நமது கழகம் நடத்தும் அனைத்துவிதமான போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் மாவட்டச் செயலாளர் தலைமையில் வெகுதிரளாக தீவிர முனைப்போடு கலந்து கொள்வேன். போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக பலமுறை கைதும் செய்யப்பட்டிருக்கிறேன்.”



கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி அவர்கள் பற்றி?
“கழகம் எனும் ஆலமரத்திற்கு தன்னை பிரதான வேராக ஒப்புக்கொடுத்திருக்கிறார் உதயநிதி அவர்கள். அதனால், கழகத்தின் வளர்ச்சிப் பணிகளும், களப்பணிகளும் புத்தாக்கம் பெற்று, புது நம்பிக்கையோடு நடைபெற்று வருகின்றன. நாளைய தமிழகம் மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவும் உதயநிதி அவர்களின் வழித்தடம் பின்பற்றி நடக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.”


உங்கள் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் பற்றி?
“எங்களையெல்லாம் அன்பால் அரவணைத்து, பாசமெனும் உணவு ஊட்டி, பண்பெனும் அறநெறி காட்டி, கட்சிப் பணிகளை மேற்கொள்ள வைக்கும் எங்கள் மாவட்டச் செயலாளருக்கு இந் நேரத்தில் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். களப்பணிகளில் வேகம், விவேகம் ஆகிய இரண்டு வழிகளிலும் எப்படிப் பயணிக்க வேண்டும் என்பதை எங்களுக்கு ஓர் ஆசானாக இருந்து கற்றுக்கொடுப்பவர். தளபதியாரின் ஆணைகளை அடிபிறழாமல் செய்து முடிப்பதில் தமிழகத்திலேயே தன்னிகரற்று திகழ்பவர் மாதவரம் சுதர்சனம் அவர்கள் என்றால் அது மிகையாகாது. மாவட்டச் செயலாளராக கட்சிப் பணிகளிலும், சட்டமன்ற உறுப்பினராக மக்கள் நலப் பணிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் மாதவரம் சுதர்சனம் எனும் பொக்கிஜ மனிதரை எங்களுக்கு வழங்கிய கழகத் தலைவர் தளபதியாருக்கு கோடான கோடி நன்றிகள்.”                  .