உதயநிதி அவர்களின் இளைஞர் அணித் தலைமை என்பது காலத்தின் கட்டாயம்!: அண்ணாநகர் ஏ.டி.முருகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்

“முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தன்னிகரற்ற தமிழ்த் தொண்டுகளாலும், கழகத் தலைவர் தளபதியாரின் ஈடு இணையற்ற சமூகச் செயல்பாடுகளாலும் கவர்ந்திழுக்கப்பட்டு, கழகத்தில் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட நான், இயக்கப் பணிகளை கடந்த 25 ஆண்டுக்கு மேலாக முழு வீச்சில் மேற்கொண்டு வரும் இச் சூழலில், இளம் தலைவர் உதயநிதி அவர்களின் எளிமை, வேகம், விவேகம், மற்றவர்களை மதிக்கும் பண்பு, எல்லோரையும் அரவணைக்கும் பாங்கு என அவருடைய சீரிய செயல்பாடுகளை இங்கே விளக்க வேண்டிய கட்டாய தருணம் இது. ஏனென்றால், எங்களையெல்லாம் தனது உத்வேகமான நடவடிக்கைகளால் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் உதயநிதி அவர்களின் பிறந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவரைப் பற்றி நிறைய பேச வேண்டிய காலத்தின் கட்டாயம் இது” என உணர்ச்சி மேலிட இயக்க உணர்வுகளோடு நம்மிடம் உரையாடத் துவங்கினார் அண்ணாநகர் ஏ.டி.முருகன் அவர்கள்.



தற்போது தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் ஏ.டி.முருகன் அவர்கள், தன்னுடைய சமூகத் தொண்டுகள் மற்றும் இயக்கத்தின் வளர்ச்சிக்கான களப்பணிகள் காரணமாக அண்ணாநகர் பகுதியில் மட்டுமல்லாது பிற பகுதிகளிலும் பிரபலமான மனிதர். கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய ஆளுமை, நிர்வாகத் திறன் பற்றிய செய்திகள்  'நமது தளபதி' இதழின் இந்தப் பதிப்பில் அதிகம் இடம் பெற வேண்டும் என்கிற முனைப்போடு தொடர்ந்து நம்மிடம் உரையாடத் துவங்கினார் ஏ.டி.முருகன்.


“கழகத் தலைவர் தளபதியாரைப் போன்றே இளம் தலைவர் உதயநிதி அவர்களும் தன்னுடைய பதின் பருவத்திலிருந்தே, ஓர் அடிமட்டத் தொண்டனாக இயக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை கழகத்தின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் நன்கறிவர். பத்திரிகையாளர், சமூக செயற்பாட்டாளர், பேச்சாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் உதயநிதி அவர்கள். அதனால்தான், கழக இளைஞர் அணிச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, அவருடைய அனுபவ ஞானம் இன்றைக்கு எல்லோரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது” என உதயநிதி அவர்களின் குணாதிசயங்களையும், செயல்பாடுகளையும் விவரித்துக் கொண்டே சென்ற ஏ.டி.முருகன் அவர்கள், சற்றே இடைவெளிவிட்டு, மீண்டும் பேசத் துவங்கினார். 


“கழக இளைஞர் அணிச் செயலாளராக இளம் தலைவர் உதயநிதி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, தன்னுடைய முதல் கூட்டத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கும், நீலகிரி மற்றும் கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும்படி கூட்டத்தாரை பார்த்துச் சொல்லவும், ஒட்டு மொத்த கூட்டமும் திகைத்து, எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், அன்றைய நிகழ்ச்சிதான் அவருடைய முதல் நிகழ்ச்சி. அவர் நினைத்திருந்தால், இளைஞர் அணிக்கான பணிகளை மட்டும் சிறப்பாகத் துவக்கி, அந் நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம். ஆனால், சமூக கண்ணோட்டத்துடன் இயங்குவதே ஒரு தலைமைக்கான முதல் பணியாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, அந்த நிகழ்ச்சியைத் துவக்கி, அனைவரையும் நிமிர வைத்தார். 


கடுமையான உழைப்பாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாலும், தலைவர் தளபதியார் அவர்கள் கட்டி எழுப்பிய இளைஞர் அணி, இன்று கழகத்தின் வலிமையான அணியாக, இயக்கத்தின் வளர்ச்சியை வேகமாக முன்னெடுக்கும் கருவியாகத் திகழ்கிறது என்பதை நாம் அறிவோம்.  அத்தகைய வலிமை மிகு ஆற்றல் வாய்ந்த இளைஞர் அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு என்பது அத்தனை சாதாரணமானது அல்ல. இதை உணர்ந்துதான், மிகச் சவாலான இந்தப் பொறுப்பை இளம் தலைவர் உதயநிதி அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார் தலைவர்.


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுமையும் உதயநிதி அவர்கள் மேற்கொண்ட பிரச்சார சுற்றுப்பயணம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகின்ற உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார் என்பதை அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் நமக்குத் தெரிவிக்கின்றன.


மனித நேயம், ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை, மக்கள் செல்வாக்கு, அனைவரையும் ஈர்க்கும் வசீகரம், முற்போக்குச் சிந்தனை, சமுதாயத்தின் வளர்ச்சிக்கான கூரிய பார்வை என அரசியல் பொது வாழ்க்கையில் ஒரு மாபெரும் வரலாற்றைப் படைப்பதற்கான அத்தனை தகுதிகளும் வாய்ந்தவராகத் திகழ்கிறார் உதயநிதி அவர்கள். இதனால்தால், தமிழகத்தில் உள்ள எதிரிக் கட்சிகள் யாவும் உதயநிதி அவர்களின் வருகையை எதிர்த்து, பல தடைக் கற்களை உருவாக்கி, அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு முட்டுக்கட்டை போட நினைக்கின்றன. ஆனால், எதிரிக் கட்சிகள் போடும் தடைக் கற்களையெல்லாம் கழகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற படிக் கற்களாக மாற்றும் வித்தை தெரிந்தவர் உதயநிதி அவர்கள் என்பதை இப்போது அந்த எதிரிகள் அனைவரும் நன்றாக உணர்ந்திருப்பார்கள்.


இன்றைய இளைஞர்களை ஈர்க்கும் காந்த சக்தி நமது இளம் தலைவர் உதயநிதி அவர்களிடம் இருக்கிறது. அதனால்தான், உதயநிதி அவர்கள் கழக இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு வந்த பிறகு, ஏராளமான இளைஞர்கள் கழகத்தில் தாங்களாகவே முன்வந்து இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். இயற்கை மிக விசித்திரமானது. அது, மக்களுக்காக சேவை செய்யக்கூடிய உண்மையான ஒரு தலைவரை ஒவ்வொரு காலத்திலும் தானாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ளும். அல்லது யார் மூலமாகவாவது கொண்டு வந்து சேர்க்கும். அந்த வகையில் நமது கழகத் தலைவர் தளபதியார் மூலமாக இன்றைய இளைஞர்களை வழி நடத்தும் தகுதி மிக்க தலைவரான உதயநிதி அவர்களை காலமே தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆம், இது காலத்தின் கட்டாயம் கருதி, காலமே தேர்ந்தெடுத்த ஆற்றல் மிகு தலைவர் உதயநிதி அவர்கள் என்பதால், இனி வரும் காலம் கழகத்தின் பொற்காலம் மட்டுமல்ல, தமிழகத்தின் பொற்காலமும் கூட என்பதை  'நமது தளபதி' இதழ் மூலமாக பறைசாற்றிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி” என்றபடியே நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார் அண்ணாநகர் ஏ.டி.முருகன் அவர்கள்.          .