உதயநிதி அவர்களின் எளிமையே அவரது வலிமை: பி.ஆர்.பாரூக், திருவொற்றியூர் கிழக்கு பகுதி சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு அமைப்பாளர்

35 வயதே ஆன இளைஞர் பி.ஆர்.பாரூக் அவர்கள் 1996ம் ஆண்டு கழகத்தில் முறைப்படி இணைந்தவர். தனது தின்னமான, சிறப்பான களப்பணிகளால் கழகத்தின் மூத்த நிர்வாகிகளிடம் நற்பெயர் பெற்று, அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர், ஈர்த்துக்கொண்டிருப்பவர் பாரூக்.



தற்போது சென்னை வடக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்குப் பகுதியின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளராகப் பொறுப்பு வகிக்கும் பாரூக் அவர்களிடம் 'நமது தளபதி' இதழ் சார்பாக பேட்டி கண்டோம். அப்போது, “என் தந்தையார் பி.ரஹமத்துல்லா அவர்கள் தி.மு.க.வின் தீவிர விசுவாசி. என்றாலும், கட்சிப் பதவிகள் எதையும் அவர் வகிக்கவில்லை. என் தந்தையாரின் மூலமாக எனக்குள்ளும் இயக்கத்தின் மீதான பற்று உருவானதால், கழகத்தில் என்னை முறைப்படி இணைத்துக்கொண்டு தீவிரமாக இயங்க ஆரம்பித்தேன். குறிப்பாக, எங்கள் குடும்பத்திலிருந்து முழுமையாக இயக்கப் பணிகளை மேற்கொள்ள வந்த முதல் நபர் நான்தான்” என உணர்வுப் பெருக்கோடு நம்மிடம் உரையாடி பாரூக், சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.


“நான் இதற்கு முன்னர் திருவொற்றியூர் நகர 31வது வார்டு இளைஞர் அணிச் செயலாளராகப் பொறுப்பு வகித்தேன். மேலும், கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக பலமுறை கைதும் செய்யப்பட்டிருக்கிறேன்” என தனக்கே உரிய பாணியில் நம்மிடம் உரையாடியவரிடம் நமது கேள்விகள் சிலவற்றை முன்வைத்தோம்.


இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி அவர்கள் பற்றி?
“திரைத்துறையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து, நற்பெயரும் ஈட்டியவர் உதயநிதி அவர்கள். குறிப்பாக, அவர் திரைத்துறையில் நடித்த கதாபாத்திரங்களின் தன்மை யாவும் மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதற்குக் காரணம், அவருடைய இயல்புத் தன்மை. அந்த இயல்புத் தன்மைதான் இப்போது கழகத்தின் முக்கியப் பொறுப்புக்கு அவரைக் கொண்டு வந்திருக்கிறது. அவருடைய நாகரீகமான பேச்சும், பாகுபாடு பார்க்காமல் பழகும் தன்மையும், இளைஞர் அணிக்கான நேர்காணல் நடத்தும் விதமும் எல்லோரையும் கவர்ந்துவிட்டது. அவருடைய எளிமையே அவருக்கான வலிமை. ஆகவே, மிக விரைவில் மாபெரும் அரசியல் தலைவராக உதயநிதி அவர்கள் உயர்வார் என்பது 100 சதவீதம் உண்மை.”


மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் பற்றி?
“கழகத் தலைவர் தளபதியார் அவர்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த தலைமை நிர்வாகி எங்கள் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம். தலைமை நிர்வாகி என்கிற பந்தா அவரிடம் கொஞ்சமும் இருக்காது. எல்லோரிடத்திலும் மிக எளிமையாகப் பழகும் பண்பாளர். நல்ல திறமையாளர். நிர்வாக ஆற்றல் மிக்கவர். ஏற்றத் தாழ்வோ, சாதி, மத வேறுபாடோ பார்க்காமல் எல்லோரிடத்திலும் இணக்கமாகப் பழகும் பண்பாளர்.”


பகுதிச் செயலாளர் தி.மு.தனியரசு பற்றி?
“எங்கள் பகுதிச் செயலாளர் தனியரசு அவர்கள் எந்தச் செயலைச் செய்தாலும், அதில் ஒரு தனித்துவம் இருக்கும். கட்சி நிர்வாகிகள் அனைவரிடத்திலும் ஆலோசித்து முடிவுகளை எடுக்கக்கூடியவர். மிகவும் தைரியசாலி. அன்பானவர் மட்டுமல்ல, பண்பானவரும்கூட. களப்பணிகளில் சூராதி சூரர்.”


வேறு ஏதாவது?
“எங்கள் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் அவர்களின் வழிகாட்டுதலோடு, பகுதிச் செயலாளர் தனியரசு அவர்களின் ஒத்துழைப்போடு, 12வது வட்டக் கழக செயலாளர் கவி.சதீஷ்குமார் அவர்களின் உறுதுணையோடு என்னுடைய களப்பணிகளையும், கட்சி சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன் என்பதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.”