என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும், தமிழகத்தில் மட்டும் பாசிச பா.ஜ.க ஒருபோதும் காலூன்ற முடியாதபடிக்கு, நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் வெற்றியைப் பெற்று, மத்திய இனவாத பாசிச பா.ஜ.க.வுக்கு சாவுமணி அடித்திருக்கிறது தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கம் என்பதை அனைவரும் அறிவர்.
கழகம் எனும் இந்த மாபெரும் மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டபோது, ஆரம்பகாலங்களில் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்திட்ட முன்னோடிகளில் ஒருவர் அ.ம.துரைவேலு அவர்கள். அடிமட்டத் தொண்டனாக இயக்கப் பணிகளை மேற்கொண்டு, கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து, அதன் பிறகு வில்லிவாக்கம் ஒன்றியக் கழகச் செயலாளர், ஒன்றியக் குழு பெருந்தலைவர் என பல பதவிகளை வகித்தவர் அ.ம.துரைவேலு. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சட்டநகல் எரிப்பு போராட்டம் முதல், கழகம் முன்னெடுத்த அறப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் யாவற்றிலும் முழு முனைப்போடு கலந்து கொண்டு, பல முறை சிறைக்கும் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் கழகத் தலைவர் தளபதியார் ஆகியோரின் முழு அன்புக்குப் பாத்திரமான அ.ம.துரைவேலு அவர்களின் மகன்தான் தற்போது வில்லிவாக்கம் ஒன்றிய கழகச் செயலாளராக துடிப்புடன் செயல்பட்டு வரும் அ.ம.துரைவீரமணி அவர்கள்.
அ.ம.துரைவேலு அவர்களின் களப்பணி வரலாற்றில் பல பதிவுகள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று, அந்தக் காலத்தில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் குடும்பத்தாருக்கு நிதி வழங்கும் விழா அம்பத்தூர் நகரத்தில் நடைபெற்றபோது, அந்த விழா மேடையில் அ.ம.துரைவேலு அவர்களின் குழந்தைக்கு வீரமணி என்கிற பெயரைச் சூட்டினார் கலைஞர். ஆக, முத்தமிழ் அறிஞர் கலைஞரால் பெயர் சூட்டப்பட்டதால், அதை தன் முதல் அங்கீகாரமாக இன்றைக்கும் மனதால் பூரித்து பெருமை கொள்கிறார் துரைவீரமணி அவர்கள். எனவே, பிறப்பிலேயே தி.மு.க.காரரான துரைவீரமணி அவர்கள், தன் தந்தையைப் போன்றே அடிமட்டத் தொண்டனாக தனது களப்பணிகளைத் துவங்கி, பின்னர் தி.மு.க. இளைஞர் அணி கிளைச் செயலாளராக பதவி வகித்து, அதைத் தொடர்ந்து வில்லிவாக்கம் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், கிளைக் கழக செயலாளராகவும், மாவட்டக் கழக பிரதிநிதியாக இரண்டு முறையும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் தலைவர் உதயநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு இதழாக வெளிவரும் 'நமது தளபதி' இதழுக்காக அ.ம.துரைவீரமணி அவர்களை நாம் நேரில் சந்தித்தபோது, தனக்கே உரிய பாங்குடன் நம்மை வரவேற்று, வெகு இயல்பாகவும், நேர்த்தியாகவும் நம்மிடம் பல்வேறு விஷயங்களை சுவைபடப் பகிர்ந்தார்.
“என்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் நல்ல வழிகாட்டியாக, களப்பணிகளில் ஆசானாக, என் வளர்ச்சியின் மீது முழு அக்கறை செலுத்துகிறவராக இருந்து வருகிறார் எங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்கள். தலைவர் தளபதியார் அவர்கள் கழக இளைஞர் அணியை உருவாக்கியபோது, இளைஞர் அணியின் போர்ப்படை சிப்பாய்களில் முக்கியமானவராக விளங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவடி நாசர் அவர்கள் என்பதை அனைவரும் அறிவர். தனது கடுமையான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து, கழகத் தலைவர் தளபதியாரின் அன்புக்கு முழு பாத்திரமாகி, இன்று மாவட்ட கழகச் செயலாளர் எனும் தலைமை நிர்வாகப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கும் ஆவடி நாசர் அவர்களின் வழிகாட்டுதலோடுதான் என் அரசியல் வாழ்க்கை பயணிக்கிறது. என்னுடைய ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலும் களப்பணிகள் யாவற்றிலும் எனக்கு நல் வழிகாட்டியாக இருப்பவர் ஆவடி நாசர் அவர்கள்” என்று, ஆவடி நாசர் அவர்களின் ஆளுமைத் திறனையும், நிர்வாகத் திறமைகளையும் நம்மிடம் எடுத்துரைத்த துரைவீரமணி அவர்கள், இயக்கம் நடத்திய போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் வெகு முனைப்போடு தவறாமல் கலந்து கொண்டு வருகிறவர். மேலும், போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக இவர் சிறைக்கும் சென்றிருக்கிறார். பல முறை கைதும் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லிவாக்கம் ஒன்றியக் கழகம் பற்றி துரைவீரமணி அவர்களிடம் நாம் வினா எழுப்பியபோது, “கழகத் தலைவர் தளபதியாரின் எஃகு கோட்டை எங்கள் ஒன்றியம். வில்லிவாக்கம் ஒன்றியத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,17,000. மாதவரம் மற்றும் மதுரவாயல் தொகுதிகளுக்குட்பட்ட 13 ஊராட்சிகளை உள்ளடக்கியது எங்கள் ஒன்றியம். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் எங்கள் ஒன்றியத்தில் தி.மு.க.வே அதிக வாக்குகளைப் பெற்றது. எங்கள் ஒன்றியம் தி.மு.க. வின் எஃகு கோட்டை என்பதற்கு இதுவே தகுந்த சான்று” என புள்ளிவிபரங்களோடு ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பற்றியும், அதில் கழகத்திற்குப் பதிவான விபரங்களையும், அதுபற்றிய தகவல்களையும் நம்மிடம் அடுக்கிக்கொண்டே சென்றவர், “எங்கள் ஒன்றியம் தி.மு.க.வின் எஃகு கோட்டையாக விளங்குவதற்கு தலைவர் தளபதியாரின் ஆசியோடு செயல்பட்டு வருகிற எங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலே மூல முதல் காரணம்” என்றார் அழுத்தமாக.
ஆவடி நாசர் அவர்களின் கடுமையான உழைப்பு, திட்டமிட்ட செயல்பாடுகளைப் பற்றி உதட்டளவில் இல்லாமல் உணர்வுப் பூர்வமாக நம்மிடம் விவரித்துக்கொண்டே சென்ற துரைவீரமணி அவர்கள் தொடர்ந்து உரையாடும்போது, “ஆவடி நாசர் அவர்கள், தலைவர் தளபதியார் தலைமையில் தி.மு.க இளைஞர் அணியில் செயல்பட்ட அந்தக் காலத்திலிருந்தே, அவருடைய வழிகாட்டுதல்படியும், ஆணைப்படியும் செயல்பட்டு வந்த நான், அப்படி செயல்பட்ட காலங்களில் நடைபெற்ற பல்வேறு களப்பணி வரலாற்றில், என் மனதுக்கு நெருக்கமான நிகழ்வை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்” என்றவர் உற்சாகத்தோடு பேசத் துவங்கினார்.
“தலைவர் தளபதியார் தலைமையில், ஆவடி நாசர் அவர்கள் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டத்தின் இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தபோது, அவருடைய சீரிய வழிகாட்டுதலோடு வில்லிவாக்கம் ஒன்றிய இளைஞர் அணியில் நான் செயல்பட்டு வந்தேன். அப்போது, தலைவர் தளபதியாரின் முன்னிலையில், வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அயப்பாக்கத்தில் இளைஞர் அணியின் பயிற்சி பாசறை முகாம் மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த மூன்று நாள் முகாமிலும் தலைவர் தளபதியார் அவர்கள் அங்கேயே தங்கியிருந்து அந்த பயிற்சிப் பாசறை நிகழ்வுகளை கண்காணித்தார். கழகத்தின் முன்னணிப் பேச்சாளர்கள் பலரும் கலந்துகொண்ட அந்த இளைஞர் பயிற்சி பாசறை முகாமில் நடைபெற்ற மனதுக்கு நெருக்கமான நிகழ்வுகளை இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது” என்று நம்மிடம் உணர்ச்சிப்பெருக்கோடு பகிர்ந்துகொண்டார் துரைவீரமணி அவர்கள்.
இளம் தலைவர் உதயநிதி அவர்களைப் பற்றி நாம் கேட்ட உடனேயே, துரைவீரமணி முகத்தில் அத்தனை பிரகாசம். “உதயநிதி அவர்கள் நமது இயக்கத்தின் எழுச்சிமிகு இருவண்ணக் கொடியை முதன் முறையாக ஏற்றியது எங்கள் ஒன்றியத்திற்குட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில்தான். பல நூறாண்டுகள் கடந்தாலும், இளம் தலைவர் உதயநிதி அவர்கள் முதன் முறையாக கழக கொடியேற்றியது எந்த இடத்தில் என்கிற வினாவுக்கு, எங்கள் ஒன்றியத்துக்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியே பதிலாக வந்து சேரும். அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க அந்நிகழ்ச்சியானது தலைவர் தளபதியாரின் 65வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்றது என்பதால், 65 அடி உயர கொடிக் கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றினார் உதயநிதி அவர்கள். மேலும், அந்நிகழ்ச்சியையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன” என்றவர் சிறு இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“இளம் தலைவர் உதயநிதி அவர்கள் முதன் முதலாக கழக கொடியேற்றிய அந்த மாபெரும் எழுச்சிமிகு நிகழ்ச்சி எங்கள் பகுதி மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதை இங்கே பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்” என்றவர், “எங்கள் மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் அவர்களின் சீரிய முயற்சியாலும் கடும் உழைப்பாலும் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சிதான், இளம் தலைவர் உதயநிதி அவர்களின் எழுச்சிமிகு அரசியல் பயணத்திற்கு அடிநாதமாக விளங்கியது என்று எங்கள் பகுதி மக்கள் அனைவரும் பேசி வருகிறார்கள் என்பதை நினைத்து வியக்கிறேன்” என உற்சாகம் ஊற்றெடுக்க பேசியவர், “உதயநிதி அவர்களின் தலைமையை இளைஞர்கள் ஆராதிக்கிறார்கள், விரும்புகிறார்கள். ஆகவே, அவர் இளைஞர் அணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதை அந்த கொடியேற்றும் நிகழ்ச்சி மூலமாக நாங்கள் எல்லோரும் அறிய முடிந்தது என்பதும் எங்களுக்கு வாய்த்த பெருமை மிகு விஜயம்” என்றபோது, துரைவீரமணி அவர்களின் முகத்தில் அத்தனை பரவசம்.
தொடர்ந்து நம்மிடம் உரையாடிய துரைவீரமணி அவர்கள், “கழக இளைஞர் அணிச் செயலாளராக இளம் தலைவர் உதயநிதி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் முழு எழுச்சியோடு கழக இளைஞர் அணியில் தங்களை இணைத்து வருகிறார்கள். உதயநிதி அவர்களின் ஆணைக்கிணங்க எங்கள் ஒன்றியத்திற்குட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வியத்தகு முன்னேற்றத்துடன் கழக இளைஞர் அணி வீரநடை போடுகிறது என்றால், அதற்கு உதயநிதி அவர்களின் சீரிய தலைமையே காரணம். எண்ணம், நோக்கம், செயல்பாடு ஆகிய மூன்று நிலைகளிலும் தனித்துவமாக யார் விளங்குகிறார்களோ, அவர்கள் இந்த உலகத்தையே தங்கள் தலைமையின் கீழ் கொண்டு வருவார்கள் என்று எங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் சொன்னது போலவே, நமது இளைய தலைவர், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி அவர்களின் எண்ணம், நோக்கம், செயல்பாடு யாவும் தனித்துவமாக இருக்கிறது என்பதால், நாளைய உலகமே உதயநிதி அவர்களை வியந்து பார்க்கும் என்பது உறுதி.
அது மட்டுமல்லே, கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையும் உலக அரங்கில் தலை நிமிரச் செய்யும் என்பது உறுதி” என உற்சாகம் மேலிட பேசியவர், “தலைவர் தளபதியாரின் ஆசியோடு செயல்பட்டு வரும் எங்கள் மாவட்டக் கழகச் செயலாளர் ஆவடி நாசர் அவர்களின் சீரிய, தனித்துவமான வழிகாட்டுதலால் எங்கள் ஒன்றியக் கழக நிர்வாகிகளும், ஊராட்சி நிர்வாகிகளும் களப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பும், முழு ஆதரவும் தந்து, இயக்கப் பணிகளில் முழு வீச்சோடு ஒற்றுமையுடன் பணியாற்றி வருகிறார்கள் என்பதை இங்கே பெருமையோடு பகிர்கிறேன். மேலும், கழகத்தின் பிற அணி நிர்வாகிகளின் செயல்பாடுகளும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது” என்றபடியே நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார் துரைவீரமணி அவர்கள். .