“என்னுடைய தந்தையார் சி.கிருஷ்ணன் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், சிறப்பாக கல்வி சேவை ஆற்றியதற்காக முன்னாள் ஷனாதிபதி அப்துல்கலாம் அவர்களுடைய திருக்கரங்களால் தேசிய அளவிலான நல்லாசிரியர் விருதையும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் பேராசிரியர் ஆகியோரின் திருக்கரங்களால் மாநில அரசுக்கான நல்லாசிரியர் விருதையும் பெற்றவர் என் தந்தையார்” என தனது தந்தையாரின் சிறப்புகளைப் பற்றி நம்மிடம் எடுத்துரைத்தார் கே.சசிகுமார்.
தற்போது தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வரும் கே.சசிகுமார் அவர்களை 'நமது தளபதி' இதழுக்காக நேரில் சந்தித்து உரையாடியபோது, தொடர்ந்து மேலும் பல செய்திகளைச் சுவைபட பகிர்ந்தார்.
“ஆசிரியர்கள் என்றாலே தி.மு.க.வின் விசுவாசிகள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆம், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த என் தந்தையாரும் கழகத்தின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர்தான். இதனால்தான், என் மாணவப் பருவத்திலேயே, என் தந்தையின் மூலமாக எனக்குள்ளும் இயக்கத்தின் மீதான பற்று இயல்பாகவே குடிகொண்டது. இதன் காரணமாக 1984ம் ஆண்டு முதலே தேர்தல் நேரங்களில் நமது இயக்கத்தின் வெற்றிக்காக என்னுடைய களப்பணி செயல்பாடுகளை ஆர்வத்துடன் மேற்கொண்டேன். அதன் பிறகு, முன்னாள் அமைச்சர் சுந்தரம் அவர்களால் கட்சிப் பணிக்குள் தீவிரமாக ஈர்க்கப்பட்டேன். ஆம், என்னுடைய அரசியல் குருநாதர் முன்னாள் அமைச்சர் சுந்தரம் அவர்கள் என்பதை இங்கே பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்” என்று உற்சாகத்தோடு உரையாடியவர், சிறு இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“என்னுடைய சொந்த ஊர் மீஞ்சூர் நகரத்திலுள்ள புதுப்பேடு கிராமம். அங்கு ஒரு சிறு பகுதியில் துவங்கிய என்னுடைய கட்சிப் பணிகளுக்கு அடையாளம் கொடுத்து, ஊக்குவித்து வளர்த்தவர் முன்னாள் அமைச்சர் சுந்தரம் அவர்கள்தான்.
1996ம் ஆண்டு மின் வாரியத்தில் பணிக்கு சேர்ந்த நான், தற்போதைய மின்கழக தொ.மு.ச.வின் மாநில துணைத் தலைவரான கே.செல்வராஜ் அவர்களால் தொ.மு.ச.வில் உறுப்பினராக இணைந்தேன். அதன் பிறகு தொ.மு.ச.வின் பிரிவு அலுவலக கிளைச் செயலாளராக பதவி வகித்த நான், தொடர்ந்து திட்ட பிரச்சார குழு துணைச் செயலாளர், திட்ட பிரச்சாரக் குழு செயலாளர், திட்ட துணைத் தலைவர் என அடுத்தடுத்து மின்கழக தொ.மு.ச.வில் உயர் பொறுப்புகளைப் பெற்றேன். அதன் பிறகு சென்னை வடக்கு திட்ட செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்தப் பதவியில் இருக்கும்போது, என்னுடைய செயல்பாடுகளைப் பார்த்து, எங்கள் பொதுச் செயலாளர் சிங்கார. இரத்தினசபாபதி அவர்களால் அடையாளம் காணப்பட்டதால், மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவி எனக்கு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிங்கார. இரத்தினசபாபதி அவர்களின் வழிகாட்டுதலோடும், ஆசிர்வாதத்தோடும் தேர்தலில் நின்று மின்கழக தொ.மு.ச.வின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறேன்” என மளமளவென்று அருவிபோல் தான் கடந்து வந்த பதவிகளைப் பற்றிச் சொன்னவர், அடுத்தடுத்து பல விஜயங்களைத் தொடர்ந்தார்.
“மேலும், நமது தலைமைக் கழகத்தின் ஆணைக்கிணங்கவும், எங்கள் பொதுச் செயலாளரின் பரிந்துரையின் பேரிலும் 2014ம் ஆண்டு நடைபெற்ற கழகத்தின் உள்கட்சித் தேர்தலில், தேர்தல் ஆணையராகவும் நான் பணியாற்றியிருக்கிறேன். இவை தவிர, தற்போது தொ.மு.ச.பேரவையின் செயலாளராகவும் நான் செயல்பட்டு வருகிறேன். இந்தப் பதவிக்கு எங்கள் பொதுச் செயலாளர் சிங்கார. இரத்தினசபாபதி அவர்களின் பரிந்துரையில், பேரவை மு.சண்முகம் எம்.பி. அவர்கள் என்னை நியமனம் செய்தார் என்பதையும் இங்கே பகிர்ந்து கொள்வதில் உவகை கொள்கிறேன்” என்றவர், அடுத்ததாக மின் கழக சங்கத்தின் வரலாறு மற்றும் செயல்பாடுகள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஷூன் 3ம் தேதி, 1967ம் ஆண்டு துவங்கப்பட்டது மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம். இந்தச் சங்கத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர், எங்கள் பொதுச் செயலாளர் சிங்கார. இரத்தினசபாபதி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதெல்லாம் மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என்பது குதிரைக் கொம்பாகவே இருந்து வந்தது. இதை உணர்ந்த கலைஞர் அவர்கள், 1971ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது முதன் முறையாக மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளித்தார். மேலும், சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்தியதும் கழக அரசில்தான். அதன் பிறகு வந்த எம்.ஜி.ஆர். அரசில் மின் வாரிய ஊழியர்களுக்கு எவ்வித பலன்களும் கிடைக்கவில்லை என்பதை அனைத்து மின்வாரிய தொழிலாளர்களும் நன்கு அறிவர்.
பிறகு1989ம் ஆண்டு கழக ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்ந்தது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வர் அரியணையில் அமர்ந்தார். மின்வாரிய ஊழியர்களின் பிரச்னைகள் கலைஞரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. உடனே, தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி மின்வாரிய ஊழியர்களுக்கும் வழங்கும் ஆணை பிறப்பித்தார் கலைஞர். அதன்பிறகு ஷெயலலிதா ஆட்சியில் மின் வாரிய ஊழியர்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். மீண்டும் 1996ம் ஆண்டு கழக ஆட்சி மலர்ந்தவுடன் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வை மின் வாரிய ஊழியர்களுக்கும் அறிவித்தார் கலைஞர். இதன் மூலம் 40 சதவீத ஊதிய உயர்வைப் பெற்றார்கள் மின்வாரியத் தொழிலாளர்கள். இந்த ஊதிய உயர்வுக்காக கலைஞர் அவர்களிடம் தக்க தரவுகளோடு பரிந்துரை செய்தவர் எங்கள் பொதுச் செயலாளர் இரத்தினசபாபதி அவர்கள்தான். ஆம், இன்றைக்கு மின் கழக ஊழியர்களின் வாழ்வாதாரம் ஓரளவு உயர்ந்திருக்கிறது என்றால், அதற்கு வித்திட்டவர் எங்கள் பொதுச் செயலாளர் இரத்தின சபாபதி அவர்கள் என்பது எங்களுக்குப் பெருமை” என்று உணர்ச்சிப் பெருக்கோடு உரையாடியவர், சில நொடி சிந்தனைக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.
“மேலும், கழக ஆட்சியில், கலைஞர் அவர்களின் ஆணைப்படி, அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களின் உத்தரவுப்படி, 1999ம் ஆண்டு தொழிலாளர் தினமான மே முதல் தேதி அன்று, தமிழகத்திலுள்ள அனல் மின் நிலையங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்த சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் நிரந்தர மின் கழக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இந்த மாபெரும் வரலாற்று சாதனைக்கு பரிந்துரைத்தவரும் எங்கள் பொதுச் செயலாளர் இரத்தின சபாபதி அவர்கள்தான் என்பதையும் இங்கே மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மேலும், 2006ம் ஆண்டு மீண்டும் கழக ஆட்சி மலர்ந்தவுடன், பல ஆண்டு காலமாக தமிழகமெங்கும் பல பகுதிகளில், பல பிரிவுகளில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, இவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், மின் பகிர்மான வட்டங்களில் இருந்த காலி இடங்கள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டன. இதன் மூலம் நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21600. இதுவும் எங்கள் பொதுச் செயலாளர் இரத்தினசபாபதி அவர்களின் பரிந்துரையில், அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரின் ஆணைக்கிணங்க, அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களின் உத்தரவுப்படி நிறைவேற்றப்பட்டது. இது தவிர 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுவரை நடைபெற்ற கழக ஆட்சியில் மின்கழக தொழிலாளர்களுக்கு மீண்டும் 40 சதவீத ஊதிய உயர்வும், பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டது. இந்தக் காலத்தில்தான் களப்பணி ஊழியர்களுக்கு, உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டது.
இப்படியாக, மின் வாரிய ஊழியர்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்து கொடுத்து, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தது நமது கழக ஆட்சியும், எங்கள் பொதுச் செயலாளர் இரத்தின சபாபதி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும்தான்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க ஆட்சியில், கழகத் தலைவர் தளபதியாரின் ஆசியுடன் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து சங்கங்கள் உட்பட 17 சங்கங்கள் ஒன்றிணைந்து, எங்கள் பொதுச் செயலாளர் இரத்தின சபாபதி அவர்களின் முயற்சியில் போராடி, 2.57 சதவீத ஊதிய உயர்வு மற்றும் புதிய பதவிகளும் உருவாக்கப்பட்டது” என்றவர், கழகத் தலைவர் தளபதியாரைப் பற்றி பேசத் துவங்கினார்.
“முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், தனது ஆட்சிக் காலத்தில் எப்படியெல்லாம் மின்வாரிய ஊழியர்களுக்கு நன்மைகளைச் செய்து கொடுத்தாரோ, அதே போன்று கழகத் தலைவர் தளபதியார் அவர்களும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாவலராக விளங்கி வருகிறார். இதனால்தான், மின்வாரியத் தொழிலாளர்கள் கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எப்போதும் கொண்டிருக்கிறார்கள்” என்றபடியே உற்சாகத்தோடு நம்மிடமிருந்து விடைபெற்றார் கே.சசிகுமார் அவர்கள்.