ஒட்டுமொத்த தமிழக மக்களும் உதயநிதி அவர்களின் விவேகமான செயல்பாடுகளைப் பாராட்டுகிறார்கள்:- பொன்.விஜயன், 47வது வார்டு கழகச் செயலாளர், ஆவடி பெருநகராட்சி

திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி பெருநகரத்தின் 47வது வார்டு கழக செயலாளராகவும், மாவட்டக் கழகப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார் பொன்.விஜயன். இவர் முன்னாள் கவுண்சிலரும்கூட.  



'நமது தளபதி' இதழுக்காக பொன்.விஜயன் அவர்களை நேரில் சந்தித்து உரையாடியபோது, “விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நான், கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, 1988ம் ஆண்டு கழகத்தில் முறைப்படி இணைந்தேன். ஆரம்பத்தில் 47வது வார்டு இளைஞர் அணித் தலைவராகப் பொறுப்பு வகித்த நான், பிறகு 47வது வார்டு கழக செயலாளராக 1995ம் ஆண்டு முதல் தற்போது வரையில் செயல்பட்டு வருகிறேன். மேலும், கடந்த பத்து ஆண்டு காலமாக மாவட்ட பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறேன்” என்று தன்னைப் பற்றிய அறிமுகத்தை எளிமையாகவும், அருமையாகவும் எடுத்துரைத்தவர், சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.


“2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஆவடி பெருநகராட்சியின் 47வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு, 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நான் 2016ம் ஆண்டு வரையில் மக்கள் பிரதிநிதியாக சிறப்பான முறையில் பணியாற்றினேன். மேலும், அதே காலகட்டத்தில் ஆவடி பெருநகராட்சியின் ஒப்பந்தக் குழுத் தலைவராகவும் செயல்பட்டேன்” என்றவர், அடுத்ததாக தனது வார்டில் செய்து முடித்த பணிகளைப் பற்றி சொல்லத் துவங்கினார்.


“நான் வார்டு கவுண்சிலராக செயல்பட்ட 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில், கழகத் தலைவர் தளபதியார் ஆசியுடன், மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலோடும், ஒத்துழைப்போடும் எங்கள் வார்டில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் நலப் பணிகளை நிறைவேற்றினேன். இந்தத் தொகையில் தார்ச்சாலைகளும், சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டன. 18 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. அடிக்கடி ஏற்பட்ட மின் தடையை நீக்குவதற்காக ஐந்து புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. புதிதாக 50 தெருவிளக்கு மின் கம்பங்கள் நிறுவப்பட்டன. மேலும், ஐமாஸ் விளக்குகளும், கழிவு நீர்க் கால்வாய்களும் அமைக்கப்பட்டன. வீட்டுக்கு வீடு குடிநீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டன. இதுபோன்று பல்வேறு பணிகளைச் செய்து முடித்தேன். அவை யாவும் இன்றும் மக்களின் பாராட்டுக்கு உரியவையாக இருந்து வருகிறது” என்றவரிடம் சில வினாக்களை கேட்டோம்.


உதயநிதி அவர்கள் பற்றி?
“என்னைப் போன்றவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் உதயநிதி அவர்களின் விவேகமான செயல்பாடுகளைப் பாராட்டுகிறார்கள். அவருடைய தெள்ளத் தெளிவான பேச்சும், இயல்பாகப் பழகும் குணாதிசயமும், எளிமையும் எல்லோரையும் கவர்ந்துவிட்டது. இளைஞர்களின் இன்றைய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் உதயநிதி அவர்கள், எல்லோருக்கும் ஒளிதரும் இளம் சூரியனாக அரசியல் வானில் பிரகாசிப்பார் என்பது உறுதி.”


மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் பற்றி?
“ஆற்றல் மிகு செயல்வீரராக திகழ்ந்து வரும் எங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்கள், என்னைப் போன்ற களப்பணியாளர்கள் ஏராளமானோரை உருவாக்கி, எங்கள் மாவட்டக் கழகத்தை துடிப்புடன் வைத்திருப்பவர். கழகத் தலைவர் தளபதியார் ஆசியுடன் கட்டுக்கோப்பாக எங்கள் மாவட்டக் கழகத்தை நடத்தி வரும் ஆவடி நாசர் அவர்களை இயக்கப் பணிகளுக்காகவோ, மக்கள் நலப் பணிகளுக்காகவோ எந் நேரம் தொடர்பு கொண்டாலும், தக்க பதிலைத் தரக்கூடியவர். மேலும், அதற்கான தீர்வுக்கான வழிகளையும் ஏற்படுத்தித் தருபவர். என்னைப் போன்ற நிர்வாகிகளுக்கு அவர்தான் அடித்தளமும், அங்கீகாரமுமாக இருக்கிறார். முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால், எங்களுக்கு தலைவர் தளபதியாரால் வழங்கப்பட்ட புதையல் பொக்கிஜம் எங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர்.”


வேறு ஏதாவது?
“கழகம் நடத்திய மக்கள் நலப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு, பலமுறை கைது செய்யப்பட்டிருக்கிறேன் நான். மேலும், 2016ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்பதால், தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல், மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி  வருகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.”             .