உதயநிதி அவர்களின் அடுத்தடுத்த செயல்பாடுகளால் கழக இளைஞர் அணியின் மேன்மை இந்தியா முழுவதும் சென்றடையும்!: கே.பி.முரளி கிருஷ்ணன், 160வது வட்டக் கழகச் செயலாளர்

சென்னை தெற்கு மாவட்டம், ஆலந்தூர் வடக்குப் பகுதியின் 160வது வட்டக் கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் கே.பி.முரளிகிருஷ்ணன் எம்.காம்.,எல்எல்பி.,எம்டி (அக்குபஞ்சர்). ஒரு பெரு நிறுவனத்தில் பணியாற்றி வரும் கே.பி.முரளிகிருஷ்ணன், கழகப் பணிகளிலும், மக்கள் நலப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர் 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆலந்தூர் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு, வெற்றி பெற்று 2011ம் ஆண்டு வரையில் சிறப்பாக மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



அவருடன் நமது நேர்காணல்...


உங்கள் 160வது வட்டக் கழகத்தில், கழகத்தின் வளர்ச்சிக்கான உங்கள் செயல்பாடுகள் பற்றி?
“எங்கள் 160வது வட்டக் கழகத்தில் சுமார் 18 ஆயிரம் வாக்காளர்கள் வசிக்கிறார்கள். இயக்கத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் எங்கள் வட்டத்து மக்கள் என்பதால், தி.மு.க.வின் எஃகு கோட்டை எங்கள் வட்டம் என்பது பெருமைமிகு விஷயம். கலைஞர் மற்றும் கழகத் தலைவர் தளபதியார் ஆகியோரின் பிறந்தநாளின்போது மருத்துவ முகாம் நடத்துவது, இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் நடத்துவது என பல்வேறு நலப்பணிகளை முன்னெடுத்து வரும் நான், அன்றைய தினத்தை முன்னிட்டு கழகத்தின் மேன்மைகளை எடுத்துரைக்கும் வண்ணம் பொதுக்கூட்டங்களையும் நடத்தியிருக்கிறேன். இது தவிர ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கல் விழாவும் எங்கள் வட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


மேலும், 2015ம் ஆண்டு தானே புயல் தமிழகத்தை தாக்கியபோது, எங்கள் வட்டத்துக்கு உட்பட்ட மாதவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் சேதம் அடைந்தது. அப்போது புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் யாவற்றையும் கழகத் தலைவர் தளபதியாரின் ஆணைப்படி வழங்கி, அம் மக்களின் துயர் துடைத்தோம்.


அண்மையில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தின்போது எங்கள் வட்டத்தில் வசிக்கும் மக்களின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக குட்டி யானை வாகனத்தின் மூலமாகவும், ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கிய லாரி மூலமாகவும் தண்ணீர் விநியோகம் சிறப்பாகச் செய்யப்பட்டு, மக்களின் குடிநீர்த் தேவை நிறைவேற்றப்பட்டது. மேலும், ஏழை மாணாக்கர்களின் கல்விக்குத் தேவையான உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறேன். இதுபோன்று கழகத்தின் வளர்ச்சிக்காக முன்னெடுத்து வருகிற பல பணிகளைச் சொல்லமுடியும். இதன் மூலம் எங்கள் பகுதி மக்களிடம் கழகத்தின் மீதான நன்மதிப்பு மென்மேலும் அதிகரித்திருக்கிறது. என்னுடைய இந்தப் பணிகளுக்கெல்லாம் கழக முன்னோடிகள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்புதான் காரணம் என்பதையும் இங்கே பதிவு செய்வது என்னுடைய கடமை.”


இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி அவர்கள் பற்றி?
“இன்றைய இளம் தலைமுறையினரின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பொருத்தமான, ஆளுமை நிறைந்த இளைஞர் உதயநிதி அவர்கள் என்பதை, அவர் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்புக்கு வந்த பின்னர் இதுவரைக்கும் செய்து முடித்த செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன. இனிவரும் காலத்தில் கழக இளைஞர் அணியின் செயல்பாடுகள் யாவும் இயக்கத்தின் மீதான பார்வையை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லும் வண்ணம் உதயநிதி அவர்களின் அடுத்தடுத்த செயல்பாடுகள் அமையும் என்பது உறுதி.”


கழகத் தலைவர் தளபதியார் பற்றி?
“நேர்மையான வழியில், சரியான பாதையில் நமக்கான இலக்கை அடைவதே ஷனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட கழகத்தின் தார்மீக மரபு என்பதை உணர்ந்தவர் நம் கழகத் தலைவர் தளபதியார். அதனால்தான், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்காமல், நேர்மையான வழியில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியைப் பிடிக்க அவர் விரும்புகிறார். எத்தனையோ பல சோதனைகளைக் கடந்து வந்த நம் தலைவர், எந்த இக்கட்டான நிலையிலும் நேர்மையைக் கைவிட்டதில்லை. அவருடைய இந்தப் பண்புதான் இன்றைக்கு தமிழகம் தாண்டி இந்தியா முழுமைக்கும் அவருக்கான மதிப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தைக் காக்க தளபதியாரை விட்டால் வேறு தலைவர்கள் இல்லை என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.”


உங்கள் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் பற்றி?
“ஓய்வே இல்லாமல் கழகத்தின் வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டு வரும் எங்கள் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் அவர்கள் எளிமையான மனிதர். மனிதநேயம் கொண்ட பண்பாளர். கழகத் தலைவர் தளபதியாரின் வழியில் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றே வாழ்கிறவர். தன்னுடைய கடுமையான களப்பணிகள் மூலமாக எங்களை பிரமிக்கச் செய்து, நாங்களும் சிறப்பாக களப்பணிகளை மேற்கொள்ளத் தூண்டுபவர்.”


மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் பற்றி?
“எங்கள் மண்ணின் மைந்தரான ஆர்.எஸ்.பாரதி அவர்கள், தான் என்ன சொல்கிறாரோ, அதைத்தான் செய்தும் காட்டுவார். இன்றைக்கு ஆலந்தூர் இத்தனை வளர்ச்சி பெற்றிருக்கிறதென்றால், அதற்கு ஆர்.எஸ்.பாரதி அவர்களின் தீர்க்கமான செயல்பாடுகள்தான் காரணம்.


மேலும், தனித்துவமான மனிதராக விளங்கிவரும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் அவர்கள் அனைவரையும் அன்பால் அரவணைத்து ஈர்ப்பவர். மக்களுக்கான பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண்பவர். 


கழகத் தலைவர் தளபதியாரின் ஆசியுடன் ஆர்.எஸ்.பாரதி அவர்களும், தா.மோ.அன்பரசன் அவர்களும் நமது கழக ஆட்சியில் கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டமும், பாதாள சாக்கடைத் திட்டமும் ஆலந்தூர் பகுதி முழுக்க என்றைக்கும் கழகத்தின் மேன்மையைச் சொல்லிக்கொண்டே இருக்கும். இதுபோல், அண்மையில் ஏற்பட்ட குடிநீர் பிரச்னையின்போது தா.மோ.அன்பரசன் அவர்கள் தனது சொந்த செலவில் ஒரு லாரியின் மூலம் ஆலந்தூர் பகுதி முழுக்க தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்தார். இந்த குடிதண்ணீர் லாரியானது இனிமேல் எப்போதும் ஆலந்தூர் பகுதிக்கென்று நிரந்தரமாக செயல்படும் என்பது சிறப்பு.”


பகுதிச் செயலாளர் குணாளன் பற்றி?
“தலைமை நிர்வாகிகளின் வழிகாட்டுதல்படி, எங்கள் பகுதிக் கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் குணாளன். அவரிடம் பகுதிச் செயலாளர் என்கிற பந்தா துளியும் இருக்காது. தன்னை ஒரு அடிமட்டத் தொண்டன் என்று நினைத்துக் கொண்டுதான் அனைவரிடத்திலும் பழகுவார். எங்கள் வட்டக் கழகத்தை சிறப்பாக நடத்திட நல் ஒத்துழைப்பு தருகிறார் குணாளன்.”


வேறு ஏதாவது?
“எங்கள் வட்டக் கழக நிர்வாகிகள், கழக இளைஞர் அணியினர் மற்றும் கழகத்தின் மூத்த முன்னோடிகள், தொண்டர்கள், குறிப்பாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டன் பிரகாஷ் மற்றும் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பிரவீன்குமார், ஆலந்தூர் நகரமன்ற முன்னாள் தலைவர் துரைவேலு ஆகியோரின் ஒத்துழைப்பாலும், உழைப்பாலும் இன்று எங்கள் வட்டக் கழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை இங்கு மனநிறைவோடு பகிர்ந்து கொள்கிறேன்.”