இன்றைய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் உதயநிதி: க.பாண்டியன், மாவட்ட கழக பிரதிநிதி, 107 (அ) வட்டம், எழும்பர் தெற்கு பகுதி

“நான் கடந்த நாற்பது ஆண்டு காலமாக இயக்கப் பணிகளைத் தீவிர முனைப்புடன் மேற்கொண்டு வருகிறேன். ஆரம்பத்தில் வட்ட செயற்குழு உறுப்பினராகவும், பிறகு பகுதிப் பிரதிநிதியாகவும், செயல்பட்ட நான் இப்போது சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் தெற்குப் பகுதி, 107வது  'அ' வட்டம், மாவட்ட கழகப் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்து வருகிறேன்” என்றபடியே நம்மிடம் உற்சாகத்தோடு உரையாடத் துவங்கினார் தற்போது 56 வயதாகும் க.பாண்டியன் அவர்கள்.



'நமது தளபதி' இதழுக்காக க.பாண்டியன் அவர்களை நாம் நேரில் சந்தித்தபோது, அவருடைய மனைவி திருமதி அமுல் பாண்டியன் அவர்களும் உடன் இருந்தார். 


தொடர்ந்து நம்மிடம் பேசிய க.பாண்டியன், “என் மனைவி திருமதி அமுல் பாண்டியன் அவர்களும் என்னைப் போன்றே இயக்கத்திற்காக உழைத்து வருபவர். தற்போது என் மனைவியார் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தப் பதவியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக செயல்பட்டு வருகிறார் என் மனைவியார் என்பது கூடுதல் சிறப்பு” என்றவர், “1981ம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி எங்கள் திருமணத்தை கலைஞர் அவர்களும், தயாளு அம்மையாரும் சேர்ந்து, அவர்களுடைய இல்லத்தில் வைத்து நடத்தி வைத்தார்கள் என்பது எங்கள் இல்லற வாழ்க்கையின் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வு” என்றபோது பாண்டியன் அவர்களுடைய முகத்தில் அத்தனை பிரகாசம்.


சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்த பாண்டியன், “கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டபோது நானும் என் மனைவியும் சேர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருவரும் சிறைக்குச் சென்றோம். எனக்கு 8 நாட்கள் சிறைவாசம். ஆனால், என் மனைவிக்கோ 12 நாள் சிறைவாசம். அப்படியென்றால், என் மனைவியாரின் போராட்டக் குணத்தை இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள்” என்றார் மனைவியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடியே.


க.பாண்டியன் அவர்களைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய திருமதி அமுல் பாண்டியன் அவர்கள், “ராணி மேரி கல்லூரி விவகாரத்தின்போது தீவிர முனைப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டேன் நான். அப்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டையிலுள்ள சிறைச்சாலையில் 15 நாட்கள் சிறைவாசம் இருந்தேன். இதுபோல் கழகம் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் யாவற்றிலும் முன் வரிசையில் முனைப்போடு கலந்து கொள்ளும் நான் பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறேன்” என்றார் கழகப் பெண் போராளிக்கான பாங்குடன்.


மேலும் நம்மிடம் பேசிய திருமதி அமுல் பாண்டியன் அவர்கள், கழகத் தலைவர் தளபதியார் பற்றி எடுத்துரைத்தார். “அன்பின் முழு வடிவமாகத் திகழ்கிறார் கழகத் தலைவர் தளபதியார். நடுக்கடலில் திக்கித் திணறி வழி தெரியாது நிற்கும் கப்பலுக்கு, கலங்கரை விளக்கம் எப்படி வழிகாட்டுமோ, அதுபோல் இருண்டு கிடக்கும் தமிழ்நாட்டுக்கு ஒளி பாய்ச்சி, வெளிச்சத்தைக் கொடுக்க வல்ல ஒரே தலைவர் தளபதியார் மட்டுமே என்பதை தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அதனால்தான், இன்று தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் தலைவரின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. உண்மை, உழைப்பு, உற்சாகம், ஊக்கம் இதுதான் கழகத் தலைவர் தளபதியாரின் நேர்மையான செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. இத்தகைய உத்தமரின் தலைமையின் கீழ் தமிழகத்தில் கழக ஆட்சி விரைவில் மலரும். அப்போது, தமிழக மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ்வார்கள்” என்று உணர்ச்சி பெருக்கோடு பேசியவர், சிறு இடைவெளிவிட்டு உதயநிதி அவர்கள் பற்றி சொல்லத் துவங்கினார்.


“இன்றைய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், தமிழகத்தின் விடிவெள்ளியாகவும் திகழ்கிறார் உதயநிதி.  'இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' எனும் வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப, தி.மு.கழகம் சரியான பொறுப்பை, சரியான நேரத்தில் உதயநிதி அவர்களுக்கு வழங்கி இருக்கிறது” என்றவரிடம், மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு பற்றி வினாவினோம்.


“நான் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் இதற்கு முன்னர் நான்கு மாவட்டச் செயலாளர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப கழகப் பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். முந்தைய நான்கு மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் சிறப்பானவைதான். ஆனால், பி.கே.சேகர்பாபு அவர்களின் செயல்பாடுகள் தனித்துவமாக இருக்கின்றன. 


குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பி.கே.சேகர்பாபு அவர்களின் களப்பணி ஆற்றல் நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிற விந்தையான ஆளுமையுடன் இருக்கும். அவரோடு பணியாற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் யாவரையும் எப்போதும் உற்சாகத்தோடு வைத்திருப்பார். ஏனென்றால், எந்தவொரு கடினமான செயலையும் உற்சாகத்தோடு செய்யும்போது, அந்த செயல் மிக இலகுவான செயலாக மாறிவிடும் என்கிற ஃபார்முலாவோடு இயங்கிவருபவர் பி.கே.சேகர்பாபு அவர்கள்.


ஆம். பி.கே.சேகர்பாபு அவர்களோடு பணியாற்றும்போது சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது. இயக்க நிகழ்ச்சிகளில்கூட கழக நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தி, அழகு பார்க்கும் பெருந்தன்மை வாய்ந்தவர். கழகத் தலைவர் தளபதியாரின் விரல் அசைவுகளுக்கு ஏற்ப வியூகங்களை அமைத்து வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வருபவர் எங்கள் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு” என்று குதூகலத்தோடு உரையாடியவர் சிறு இடைவெளி விட்டு மீண்டும் பல விஷயங்களைப் பகிர்ந்தார்.


பின்னர், இறுதியாக “எங்கள் பகுதிச் செயலாளர் விஷயகுமார் பற்றியும் இங்கே சொல்லியாகவேண்டும்” என்றவர், “எங்கள் மாவட்டச் செயலாளரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப களப்பணிகளிலும், நலப் பணிகளிலும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வரும் விஷயகுமார், பகுதிக் கழகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்” என்றபடியே உவகை ததும்ப உற்சாகத்தோடு தனது உரையாடலை முடித்தார்.         .