திண்டுக்கல்:
முன்புற உடைந்த கண்ணாடியுடன் பெங்களூருவிலிருந்து - மதுரை வரை அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பெங்களூருவிலிருந்து - மதுரை வரை இயக்கப்படும் தடம் எண். 846 (TN 01 AN 0401) என்ற அரசு விரைவு பேருந்து ஓசூர் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அதிக வெயிலால் டிரைவர் சீட்டின் முன்புற கண்ணாடி உடைந்தது. டிரைவர் அங்குள்ள டெப்போவில் மாற்று கண்ணாடி கேட்டுள்ளார். அதிகாரிகள் 'இல்லை, உங்கள் டெப்போவில் சென்று மாற்றி கொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டனர்.
எனவே, 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் சுமார் 400 கி.மீ., மேலாக பயணித்து திண்டுக்கல்லுக்கு 2 மணி நேரம் தாமதமாக மாலை 5:30 மணிக்கு வந்தது.
பயணி ஒருவர் கூறும்போது, ''அரசு விரைவு பேருந்துகள், டவுன் பஸ்சை விட மோசமாக உள்ளது. சீட்டுகள் கிழிந்தும், பராமரிப்பின்றியும் உள்ளது. முகப்பு கண்ணாடி இன்றியே 400 கி.மீ. பயணித்துள்ளோம். துாசி, புழுதி, பூச்சிகளை எதிர்கொண்டு வந்தோம். பஸ் ஊழியர்களிடம் கேட்டும் பயனில்லை'' என்றார்.