முப்பெரும் விழா உறுதியேற்பு!


ஒரு சாலையில், நடக்க முடியாதவன் போகாமல் இருப்பது இயற்கை. நடக்க முடிந்தவன் போகாமல் இருப்பது கேள்விக்குரியது. அந்த சாலையில் போனால் தான் பல வேலைகள் முடியும். இல்லையெனில் சுற்றி வர பல மணி நேரம் ஆகும். பணிகள் பாழாகும். சிலர் மட்டும் போகலாமாம், பலன் காண்பார்களாம்! இது ஏன்? கேள்வி கேட்டு ஏதாவது மீறினால் அவர்கள் குடும்பமே சாபத்துக்கு ஆளாகி விடும் என ஆன்மீக மிரட்டல். எதற்கும் அஞ்சாதவர்கள் கூட ஆண்டவன் ஆணை என்ற உடன் நமக்கு ஏன் வம்பு? என பாதை வாயிலை தொட்டுக் கும்பிட்டு விட்டு ஓடினார்கள். ஒரு கூட்டம் வைக்கத்தில் கொண்டாட்டம் போட்டது. இந்தக் கொடுமையை உடைத்து தூளாக்கியது யார்?


மானம், வீரம், புகழ், மொழித் தொன்மை, வரலாறு, அறநெறி நூல்கள், மனிதப் பண்புகள் கொண்டு நாகரீகத்தை உலகுக்குச் சொல்லிக் கொடுத்த நம் தமிழினத்தை அதன் நல்ல நன்மைகளை கொண்டு வரவேற்க இயல்பினை பயன்படுத்தி பக்குவமாய் நிலையாய் உயரிடம் பெற்ற ஆரிய நாடோடிக் கூட்டம் பிறப்பால் பேதம் கற்பித்து கடவுள்கள் கதைகளைப் பரப்பி சனாதன வர்ணாசிரம கோட்பாடுகளை நயமாக அரச ஆளுமை யினிடம் பேசி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கொஞ்சம் கொஞ்சமாய் நீ அவனை விடப் பெரியவன் என கடவுள் படைத்துள்ளான். உயர்ந்த நீ உத்தரவிடு என்று ஏற்றம் இறக்கம் சுகங்களைக் காட்டி, கூட்டி நம்ப வைத்து தெய்வ சக்தியுடன் தான் பேசி உன் ஆளுமைக்குப் பாதுகாப்பு செய்வேன் என்றெல்லாம் பேசிய ஆரியத்தின் கபட நாடகத்தில் வேந்தர்கள் வீழ்ந்தார்கள்.


காலம் ஓடியது திராவிடர்களின் பெரும்பான்மை யோருக்கு கல்வி மறுக்கப்பட்டது. உடலுழைப்பை செய்யத்தான் அவன் பிறந்துள்ளான். தலைவிதி. அடுத்த ஜென்மத்தில் மீண்டுவர உண்மையாய் உழைஎன்ற போதனை முழுவதும் ஏறியது. வீர வாளால் காய்கறி நறுக்கத் தொடங்கினான். ஆம் ஆரியம் எதைச் சொன்னாலும் அரசன் முதல் ஆண்டிகள் வரை ஆடினர்கடவுளுக்குத் தெரிந்த வேதமொழி சமஸ்கிருதம் என்றனர். தமிழுக்கு ஆலயக் கருவறைக்குள் இடமில்லை என விரட்டினர்முன்னிலை மறந்தவர்களைத் தன்னிலை அறியாதவர்களாக பல்லக்குத் தூக்கி பஜனைக்கு ஆடி தமிழர்கள் சுகமான அடிமைகள் ஆனார்கள்.


ஊர் பாதுகாவலர்களால் வீரமிக்க அச்சமில்லாத் தலைவர்களாகயிருந்து கற்சிலைகளாய்த் திராவிடத் தமிழர்களுக்குக் குலதெய்வங்களாய் இன்றும் நிமிர்ந்து நிற்கும் அவர்களுக்கான ஆண்டு விழாக்களில் சமஸ்கிருதம் கிடையாது. படையல்களில் திராவிடம் சிரித்தது. வீரமிக்க இனமாக குலதெய்வ வழிப்பாடுகள் இருந்தன. நாம் வேறு அவர்கள் (ஆரியம்) வேறு என்பதற்கு இதுவே வெளிப்படையான ஆதாரம்.


புராணங்கள், கட்டுக்கதைகள், என நம் மக்களின் நம்பிக்கையில் சுலபமாகத் திணித்தார்கள். கல்வி முழுவதுமாக பார்ப்பனரல்லாதவர்கள் (சூத்திரர்கள்) அனைவருக்கும் மறுக்கப்பட்டது. வேதம் படிப்பதை காதால் கேட்பதுக் கூடப் பாவம். ஈயத்தை காய்ச்சி வேதம் கேட்ட சூத்திரனின் காதில் ஊத்தணும் என்று சட்டம் வைத்திருந்த சண்டாள பாவிகள். பாழாப்போன நம்பிக்கையால் தமிழன் மொழி இழிவைப் பற்றி கவலைப்படவில்லை . திராவிட மண் சாரம் சோரம் போனது.


'இந்தியா' என்ற பெயரளித்து வெள்ளையர் போட்ட வரைபடத்தில் முத்தமிழ் நாடும் சேர்ந்தது. வெள்ளையர் மருத்துவமாய், கல்வியாய் ஓரளவு வர உதவினாலும் ஆரியத்தை மீற முடியாமல் இருந்த காலங்கள் நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் நடுங்கும். யாராக இருந்தாலும் சிந்தித்து பார்க்கவேண்டும். ஒரு நிமிடமாவது நமக்காக செலவிடுங்கள். வரலாற்றுப் பக்கங்களில் ஒளி பாய்ச்சல் தெரிய ஆரம்பித்த காலத்தை எண்ணிப் பாருங்கள். திராவிடத்தின் சுடர் ஆர்யத்தை சுட்டு வீழ்த்த தொடங்கிய காலத்தை கற்பனைசெய்து பாருங்கள். நமது இயக்கம் நம்மை வாழவைத்த இயக்கம் என்ற பெருமையுடன் நாம் இந்த நிமிடம் கூட தலைநிமிர நடைப் போடலாம்.


திராவிடச் சிந்தனையின் ஊற்றுக்கண் யார்? கல்வி மறுத்த கூட்டத்தினை வேரறுத்த தலைவர் யார்? சாலைகளை மூடியவனின் முகத்திரையை கிழித்தது யார்? உலகின் முதல் மொழியான நம் தாய்மொழி தமிழை இழிவுபடுத்தியவனின் சதியை அம்பலப்படுத்தியது யார்? தீட்டுக்கு தீட்டு தர 'வாடா வெளியே' என்று அழைத்து போராட வைத்தது யார்? இந்த மண்ணுக்கு உரிய வீரமும் விவேகமும் உள்ளவனே வர்ணாசிரமத்தை எரி, சனாதனத்தை எறி எனக்கூறி மனிதனாய் நம்மை அறிவுபூர்வமாக மாற்றியது யார்? நாடெங்கும் பள்ளிகள் காமராசரை திறக்க வைத்தது யார்? குலக்கல்வி என்ற கோடாரி மூலம் நம்மை மீண்டும் பிளக்க வந்த ராஜகோபாலரை திரும்பப் பெற வைத்தது யார்? அரசமைப்பு சட்டத்தின் முதல் திருத்தமாய் 1951இல் நேரு பண்டிதரை கொண்டு வர வைத்தது யார்? இட ஒதுக்கீடு கல்விக்கு மட்டுமல்ல அரசு வேலை வாய்ப்புக்கும் என்று எவர் நம்மை நிமிர வைத்தது?


திராவிட இயக்கம் இல்லையெனில் சமஸ்கிருதத்தை தூக்கிக் கொண்டிருந்த மருத்துவக்கல்வி நமக்கு கிடைத்திருக்குமா? அந்த சிந்தனையை நமது திராவிட இயக்கமான நீதிக்கட்சி அரசுக்கு வரவழைத்தது யார்? 1944ல் 'நீதிக்கட்சி' என்பது இனி 'திராவிடர் கழகம்' என பெயரிட்டு அறிஞர் அண்ணா மூலம் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது யார்? சொல்லிக்கொண்டே போனால் நாட்கள் கூட ஆகலாம். எழுதிக்கொண்டே போனால் பல தொகுப்புகள் போட வேண்டிவரும். யார்? யார்? என்று கேட்ட ஒவ்வொரு நிலைச் சூழலுக்கும் பதிலாக தன்னையே எரித்துக் கொண்டு பிறருக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாய் பல ஆண்டுகள் எரிந்து வெளிச்சம் தந்தவர், நம் ஈடற்ற இணையற்ற உலக சிந்தனையாளர் திராவிட சூரியோதயம் தந்தை பெரியார் அவர்கள்தான்.


பெரியாரே நமக்கு வழி, வழி என்றார், முத்தமிழறிஞர் உருவாய் இல்லாவிடிலும் உயிராய் நம் உணர்வில் உலாவரும் தலைவர் கலைஞர் அவர்கள். தமிழன் அடிக்கடி தன்னை மறந்து ஆகாதவர்கள் உடன் ஆட்டம் போடப் போய்விடுவான் என்பதால் நாம் தான் சரியாக தமிழர்களுக்காக இருந்தாக வேண்டும்.


வீரமும் விவேகமும், அறிவும் ஆற்றலும் கொண்ட என்னருந் திராவிடத்தீரர்களே! என் உடன்பிறப்புகளே! நாம் நம் கடமை செய்வோம் என்று வருடா வருடம் செப்டம்பர் மாதம் நம் திராவிடத் திருவிழா மாதம் என்றார் தலைவர் கலைஞர்.


ஆம் நம் வாழ்வு ஒளிர தன் வாழ்வை அர்ப்பணித்த தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17 அவரின் கொள்கைப் பெருமழை, அறிவால் உலகை அதிசயிக்க வைத்த திராவிடப் பல்கலைக்கழகம் அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. திராவிடரியக்க அய்யாவின் இலட்சியங்களுக்கு அரசியல் வடிவமாக அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த நாள் செப்டம்பர் 17. இம்மூன்று முத்தான நாட்களை முப்பெரும் விழாவாக கொண்டாட உத்தரவிட்டவர். இயக்கத்தின் இதயமாய் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்ற நம் உயிரோவியம் தலைவர் கலைஞர் அவர்கள். காலம் தன்னுடன் அவரை இணைத்துக் கொண்டாலும் அவரின் எண்ண ஓட்டமாய், செயல் வடிவாய், கொள்கைப் பிடிப்பாய் தலைவர் தளபதி நமக்கு காலக்கொடையாய் கிடைத்துள்ளார்.


இந்தக் காலம் இந்தியாவில் பாசிச காலம். ஹிட்லர் முசோலினியாய் மோடியும், அமித்ஷாவும் கொலைவெறி கார்ப்ரேட் வெறியுடன் ஆளும் காலம். திராவிடத்தின் நேரிடை எதிரிகள். வடமொழிப் பல்லக்கு தூக்கிகள். ஆகவேதான் நம் தலைவர் தளபதி திராவிடப் போர் முழக்கமாக முப்பெரும் விழா அழைப்பு விடுத்துள்ளார். திருவண்ணாமலையில் இந்த ஆண்டு விழா என்றும் 'விழாத வீரனே' என்று அழைத்துள்ளார்.


அவரின் ஆணைக்குக் காத்திருப்போம். களம் அமைத்தால் போர் முனைக்கு அழைத்தால் உயிரைவிட நம் இயக்கமே மேலெனப் போரிட உறுதியேற்போம். முப்பெரும் விழா எங்கள் திராவிடத் திருவிழா.


வாழ்க கலைஞர் புகழ்!


வெல்க தலைவர் தளபதி!