தலையங்கம்

வானமேறி வைகுண்டம் போகும் எடப்பாடி பழனிச்சாமி?


அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு திரட்டுவதாக 'அல்வா Sவிற்கப்போய்' வெறுங்கையோடு திரும்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்ததாக நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச் செல்லப்போவதாக திருவாய் மலர்ந்திருக்கிறார்.


இஸ்ரேல் நாட்டில் பெய்யும் மிகக்குறந்தபட்ச மழையின் நீரை வைத்து "டிரிப் இரிகேஜன்” என்னும் சொட்டுநீர் பாசனத்தின் பலன்களை அந்நாட்டு மக்கள் பன்நெடுங்காலமாக அனுபவித்து வருகின்றனர்.


நாடு தழுவிய அளவில் நதிகள் இணைப்புக்கும் மாநிலங்கள் இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களுக்கும் புதிதாக ஒரு அமைச்சகத்தையே நமது மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையில் நீர் மேலாண்மையில் மட்டும் நாம் கவனம் செலுத்தினாலே போதுமானது. இதற்காக எந்த நாட்டுக்கும் போய் நாம் பாடங்களை கற்கத் தேவையில்லை.


பருவமழைக் காலங்களில் மட்டுமாவது நீர் மேலாண்மை விவகாரத்தில் நமது மாநில அரசு உள்முனைப்போடு, தீவிரமாக அக்கறை செலுத்தினாலே போதும். தமிழக விவசாயிகளின் வேளாண்மைக்குத் தேவையான தண்ணீரையும் சென்னை உள்ளிட்ட பெருநகர மக்களின் அடிப்படை வாழ்வாதாரத் தேவையான குடிநீருக்கும் எந்த காலத்திலும் பற்றாக்குறையோ, பஞ்சமோ ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என அறுதியிட்டுக் கூறலாம்.


போதுமான வடிகால் வசதி செய்யப்படாமல் சாலைகளில் புரண்டோடி, கூவம் போன்ற கழிவுநீர் கால்வாய்களில் பாய்ந்து, கடலில் விழுந்து வீணாய்ப் போகும் தண்ணீரை ஆக்கப்பூர்வமான முறையில் தேக்கிவைத்து மக்களின் தாகத்தைத் தீர்த்திட நம்மால் நிச்சயமாக முடியும். 


கொள்ளிடம் ஆற்றிலிருந்து வெளியேறி இப்போது கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடிதண்ணீர் பற்றி கவலைப்படாத எடப்பாடி தலைமையிலான அரசு, கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக உபரிநீராக மேட்டூருக்கு வந்த காவிரி நீர், இன்னும் காவிரி டெல்டாவுக்குட்பட்ட பல இடங்களில் கடைமடைப் பகுதிகளை சென்றடையாதது குறித்தும் வேதனைப்படவில்லை.


கொள்ளிடத்தில் கடந்த ஆண்டில் 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் வீணாக கடலில் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் இப்படி பயனற்றுப் போய்க்கொண்டிருக்கிறது.


ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் 480 கோடி ரூபாயில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும்,பல அறிவிப்புகளுக்கு நேர்ந்த கதி அதற்கும் ஏற்பட்டு, தடுப்பணைகள் கட்டப்படவில்லை.


ஆனால், அதுபற்றியோ,கடலில்கலக்கும்காவிரிநீரைஉரியவகையில், வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதிலோ எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறையுமில்லை, ஆர்வமும் இல்லை. "நானும் ஒரு விவசாயி”என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளி, மண்ணைப் போட்டு மூடுவதிலேயே முதல்- அமைச்சர் கவனமுடன் செயல்படுகிறார்.


நீர் மேலாண்மையில் அ.தி.மு.க அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பொதுப்பணித்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் காட்டும் அலட்சியத்தால் பொதுப்பணித்துறை இப்போது வருகின்ற தண்ணீரையும் பாதுகாக்க முடியாமல் வீணடிக்கும் புதுப்பணித் துறையாக மாற்றப்பட்டுள்ளது என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் கழகத் தலைவருமான தளபதி சமீபத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.


குடிமராமத்துப் பணிகள் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, ஆங்காங்கே அ.தி.மு.க.வினர்'கமிஷன்' அடிக்கும் பணியாக நடைபெற்று வருகிறது. அதற்கு உடன்படாத பொறியாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இந்த லட்சணத்தில் 'நீர் சிக்கனம்'பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதைப் பார்த்து, பொதுப்பணித்துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் எள்ளி நகையாடுகிறார்கள்.


”வீட்டையேமுறைப்படுத்தவக்கற்றவர், நாட்டைமுறைப்படுத்தக் கிளம்பிவிட்டார்” என்று பொதுவெளியில் பலர் கேலி பேசுவது எடப்பாடிக்கு எட்டவில்லை போலிருக்கிறது!


கோடையிலும், வறட்சியிலும் பாதிப்புக்குள்ளாகி, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் குடங்களை தூக்கிக் கொண்டு இரவு பகலாக அலைந்த தாய்மார்கள் இன்று காவிரி நீர் கடலில் கலப்பதைப் பார்த்து கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.


ஆகவே, காவிரி நீரைச் சேமிப்பதற்கும் நன்கு பயன்படுத்துவதற்கும் உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிவித்த கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டங்களை, அறிவிப்போடு இழுத்து மூடிவிடாமல், உடனடியாக நிறைவேற்றி, கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.


உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலா'வின் ஒரு பகுதியாக “இஸ்ரேல் போகிறேன்” என்பது வேடிக்கை மிகுந்த வினோதமாக இருக்கிறது எனவும் தளபதி சுட்டிக் காட்டியுள்ளார்.


எனவே, முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளில் அல்வா விற்றது போதும் எடப்பாடியார் அவர்களே! இஸ்ரேல் கதையை கொஞ்சம் மறந்துவிட்டு முதலில் கூரையேறி கோழிப் பிடிக்கப் பழகுங்கள். பிறகு வானமேறி நீங்கள் வைகுண்டம் போகலாம்!