மென்மையான அணுகுமுறையால் இளைஞர் அணியின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கிறார் உதயநிதி!

டாக்டர் வி.கலைவாணன்
சென்னை வடக்குமாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்



சென்னை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகிக்கிறார் 56 வயதாகும் டாக்டர் வி.கலைவாணன். சென்னை வடக்குப் பகுதியில் மிக பிரபலமான மருத்துவராகவும், மனித நேயம் மிக்க மனிதராகவும், ஏழை எளிய மக்களின் அன்புக்கு பாத்திரமானவராகவும் விளங்கி வருகிறார் டாக்டர் வி.கலைவாணன் அவர்கள் என்பதை, அந்தப் பகுதியை நாம் வலம் வந்தபோது அறிய முடிந்தது. மேலும், கழகத்தின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான மறைந்த திரு ஆலடி அருணாவின் உடன் பிறந்த சகோதரர் மகன்தான் டாக்டர் வி.கலைவாணன் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி பூங்கோதை ஆலடி அருணா இவருக்கு மூத்த சகோதரியாவார்.


'நமது தளபதி' இதழின் முப்பெரும் விழா சிறப்பிதழுக்காக டாக்டர் வி. கலைவாணன் அவர்களை நாம் நேரில் சந்தித்து உரையாடினோம். அப்போது நம்மிடம் பேசிய கலைவாணன் அவர்கள், "பாரம்பரியமான கழக குடும்பத்தைச் சேர்ந்த நான் கடந்த பதினைந்து ஆண்டு காலமாக இயக்கப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன். என்னுடைய தந்தையார் வை.வைகுண்டம் அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள தனலஷ்மி பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்" என்று தன்னைப் பற்றிய சிறு அறிமுகத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட டாக்டர் கலைவாணன் அவர்கள் மருத்துவர் மட்டுமல்ல, நல்ல கவிப்புலமை கொண்டவரும் ஆவார்.


ஆம், கலைவாணன் அவர்கள் எழுதிய கவிதைகள் பல்வேறு இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. மேலும், இவர் சிறந்த மேடைப் பேச்சாளரும்கூட. தற்போது இவர் வகித்து வரும் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்தான் இவருடைய முதலாவது கழகப் பதவி என்றாலும், இந்தப் பதவிக்கு வரும் முன்னரே இவருடைய உணர்வுமிக்க பேச்சாற்றல் மற்றும் இயக்கப் பற்று காரணமாக, கழகப் பொதுக்கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு, தனது கணீர் மேடைப் பேச்சால் அனைவரையும் கவர்ந்து வருபவர் என்பது சிறப்புக்குரியது.


நம்மிடம் தொடர்ந்து பேசிய கலைவாணன் அவர்கள், “நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். பொதுமக்களின் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக, நமது இயக்கம் சார்பாக நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் என்னுடைய சேவை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பதவிக்கு வந்த பின்னர், எனது சொந்த செலவில் கழகத் தலைவர் தளபதியாரின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை டெங்கு காய்ச்சல் நிவாரணத்துக்கான மருத்துவ முகாம்களை நடத்தியிருக்கிறேன்.


இதுபோல், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஆண்டுக்கு ஒரு முறை மிகப் பெரிய மருத்துவ முகாமை நடத்தி வருகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கஜா புயல் பாதிப்பின்போது, கழகத் தலைமையின் ஆணைப்படி தஞ்சாவூரில் ஒரு மருத்துவ முகாமை நடத்தினோம்.


திருவொற்றியூர் பகுதியிலும் இதுபோல் ஒரு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இது தவிர, கழகத்தின் சார்பாக நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் என்னுடைய பங்களிப்பும், சேவையும் தொடர்ந்து இருந்து வருகிறது” என உற்சாகத்தோடு நம்மிடம் பேசிய கலைவாணன் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி பற்றி?


“உதயநிதி அவர்களின் வருகை மற்றும் அவருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது பற்றி, 'இது வாரிசு அரசியல்' என கழகத்தின் வளர்ச்சி பொறுக்கமாட்டாமல், பொறாமை கொண்ட சிலர் அங்கலாய்க்கிறார்கள். கழக இளைஞர் அணி பொறுப்புக்கு தலைவர் தளபதியார் வந்த போதும் இதேபோன்றுதான் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், தன்னுடைய உழைப்பால், திறமையால் அந்தப் பேச்சுக்களை முறியடித்தார் தலைவர் தளபதியார்.


இதேபோன்றுதான் உதயநிதி அவர்களும் 'என்னுடைய செயல்பாடுகள் நான் யார் என்பதை நிரூபிக்கும்' என்று கூறியிருக்கிறார். ஆம், அவருடைய செயல்பாடுகள் அவருக்குள் இருக்கும் திறமையை உலகறியச் செய்யும். அப்போது வாரிசு அரசியல் என இட்டுக்கட்டியவர்களின் வாய்கள் கட்டப்படும்.


உதயநிதி அவர்களின் வருகையால் கழகத்தின் இளைஞர் அணிக்கு புது இரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. தன்னுடைய மென்மையான அணுகுமுறை, சரியான திட்டமிடல்களால் இளைஞர் அணியின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும், ஊக்க சக்தியாகவும் இருக்கிறார் உதயநிதி. அவருடைய உழைப்பின் மேன்மை பற்றி வருங்காலம் வியந்து பேசும். காத்திருங்கள்.”


உங்கள் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் பற்றி?


"எவரிடம் திறமை இருக்கிறதோ அவருக்கு, மென்மேலும் ஊக்கத்தைக் கொடுக்கும் உயரிய பண்பாளர் எங்கள் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம். அதுபோல், கட்சிப் பணிகளில் சரியாக செயல்படாதவர்களையும் கண்டறிந்து, கண்டிக்கக்கூடியவர். எல்லோரிடமும் இன்முகத்துடன் பழகும் எங்கள் மாவட்டச் செயலாளர், களப்பணிகளுக்கான வியூகங்களை அமைத்து வெற்றி காண்பதில் தனிச் சிறப்பானவர். தலைவர் தளபதியாரின் ஆணைகளை அப்படியே நிறைவேற்றும் ஆற்றல் வாய்ந்தவர். மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் தனது செயல்பாடுகளால் கொடுத்துக் கொண்டே இருப்பவர்."